Wednesday, January 28, 2015

சென்னை திரைப்பட விழா

தன்னை கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து அந்தப் பெண் வீட்டைவிட்டு தப்பிக்க எண்ணுகிறாள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவளுடைய போராட்டங்கள் அத்தனையையும் வீணாக பெற்ற தந்தையாலும் சகோதரனாலும் கொல்லப்படுகிறாள். The Paternal House திரைப்படத்தின் இந்தக் காட்சி ஓடிக்கொண்டிருந்த சென்னை ஐநாக்ஸ் திரையரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது. படம் முடிந்து வெளியே வந்து உடனே உட்லேண்ட்ஸ் அரங்கத்திற்கு விரைந்தால் அங்கே கண்ணீர் மல்க வைக்கிறது ஒரு படம்.  அப்படியே கேசினோ அரங்கத்திற்குச் சென்றால் அங்கே வயிறு நோக சிரிக்க வைக்கிறது இன்னொரு படம். பின் ரஷ்ய கலாசார மையத் திரையரங்கில் மனம் நெகிழ வைக்கும் ஒரு படம் என வித விதமான உணர்வுகளுக்குள் ரசிகர்களை மூழ்கடித்தது சென்னை சர்வதேச திரைப்படவிழா.
 டிசம்பர் 18 தொடங்கி 25 ந் தேதி வரை கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது திரைப்பட விழா. அரங்கங்கள் இளைஞர்களால் நிரம்பி வழிந்தன. பலருக்கு எந்தப் படத்தைப் பார்ப்பது என்று குழப்பம். ஒரே நேரத்தில் நல்ல படங்கள் வெவ்வேறு திரையரங்களில் திரையிடப்பட்டதால் எதைப் பார்ப்பது என்கிற குழப்பம். ஒரே நேரத்தில் எந்தப் படமும் பிடிக்காமல் வெளியே வந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் காண முடிந்தது. விழாவில் திரை ரசிகர்களும் திரைத்துறையினரும் கலந்துகொண்டு திரைப்படங்கள் பார்த்தனர். அன்றாடம் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சந்தானபாரதி, ராம் போன்றவர்களைக் காண முடிந்தது. 
55 நாடுகளிலிருந்து 170 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஹங்கேரி, இரான், ஃபிரான்ஸ், உலக சினிமா, டச்சு ரொமாண்டிக் படங்கள், சமகால ஜெர்மன் படங்கள், இந்தியன் பனோரமா, ரெட்ரோஸ்பெக்டிவ், தமிழ் திரைப்படங்கள், மாணவர்களின் படங்கள் ஆகிய வகைகளில் படங்கள் திரையிடப்பட்டன.
சென்ற ஆண்டு விழாவில் சிறந்த படமாக தேர்வுசெய்யப்பட்ட தங்கமீன்கள் படத்தின் இயக்குநர் ராம் இந்தியா டுடேயிடம் “இதுபோன்ற விழாக்களில் நான் இந்திய மொழி படங்களையே அதிகம் பார்க்க விரும்புகிறேன். உலக படங்கள் விசிடியில் கிடைக்கிறது. ஆனால் பிற மாநில மொழி படங்களைப் பார்க்க முடிவதில்லை. அக்குறையை இத்தகைய விழாக்கள்தான் போக்குகின்றன. 35 வயதிற்கும் குறைவான இளைஞர்களின் படங்களே இப்போதெல்லாம் அதிகமாக விழாக்களுக்கு வருகின்றன.  அவர்களுடைய சிந்தனையும் நம் சிந்தனையும் எப்படி இருக்கின்றன என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம் பண்பாடு என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள இவ்விழாக்கள் உதவுகின்றன. குறிப்பாக இடதுசாரி நாடுகளாக இருந்தவற்றில் உலகமயம் எப்படி இயங்குகிறது போன்றவற்றையெல்லாம் நாம் படவிழாக்கள் மூலமே தெரிந்துகொள்கிறேன்.” என்கிறார்.
படங்களின் தேர்வு குறித்து வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  இயக்குநர் பாலாஜி சக்திவேல் “விழாவில் நான் பார்த்தவரை தனிமனித உணர்வுகளை சித்தரிக்கும் படங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. அரசியல் படங்கள் மிகவும் குறைவாக இருந்தது. அந்தக் குறையை போக்க வந்த படமாக மராத்திய படமான ஃபன்ரி இருந்தது. அப்படத்திற்காக இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ளலாம். படவிழாவில் இதுபோன்ற அரசியல் படங்கள் சம அளவில் இருக்கவேண்டும். ஆனால் இருக்கும் ஒன்றிரண்டு படங்களும் கறுப்பர்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் படங்களாக இருந்தன. சென்ற ஆண்டு அதிக அளவில் பாலியல் சார்ந்த படங்கள் இருந்தன. இந்த முறை அப்படி அல்ல என்பது நல்ல விஷயம். ஏற்பாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டைவிட சென்ற ஆண்டு சிறப்பாக இருந்தது” என்றார். பல ரசிகர்களும் இதை வழிமொழிகிறார்கள். கேசினோ அரங்கத்தில் ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டி இருந்ததை பலர் சுட்டிக்காட்டினர். 

தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக நடைபெறும் விழாவுக்கு இந்த முறை வெளியூர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்திருந்தனர். பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த அரவிந்த் கார்த்திக் “படங்களின் தேர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். சில படங்கள் வணிகத் தன்மையுடன் இருந்தன. குறிப்பாக இவ்விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்படிருந்த தமிழ்ப்படங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற படங்கள் இதில் திரையிட தகுதி இல்லாதவை. வெவ்வேறு மொழி திரைத்துறையினர் வரும் விழாவுக்கு சிறந்த தமிழ்ப் படங்களை தேர்வுசெய்யவேண்டாமா?” என்று கேட்கிறார். ”குற்றம் கடிதல் படம் விருதுக்குரிய படமாக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் பாலாஜி சக்திவேல். 

இரண்டாம் பரிசு பெற்ற படம் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை. நடுவர் குழுவின் சிறப்புப் பரிசை கதை திரைக்கதை வசனம் இயக்கமும், பூவரசம் பீப்பியும் பெற்றன. மெட்ராஸ், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களை நடுவர் குழு கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பான விஷயம்தான். ஜிகர்தண்டா திரையிடப்படவே இல்லை. ஆனால் யூத் ஐகான் விருது அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குக் கிடைத்தது. விழாவில் பேசிய அவர் “ஜிகர்தண்டா இவ்விழாவில் நுழையவில்லை என்கிற வருத்தத்தை எனக்குக் கிடைத்த இந்த விருது ஈடு செய்கிறது” என்றார். 

எழுத்தாளரும், திரைத்துறையைச் சேர்ந்தவருமான லஷ்மி சரவணகுமார் “இவ்விருதுகளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் உள்ளவர்கள் தமிழ் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடாது. உலக படவிழாக்களில் எல்லாம் பிற மொழி கலைஞர்களைத்தான் நடுவர் குழுவில் வைத்திருப்பார்கள். சுகாசினி போன்றவர்கள் துபாய் படவிழாக்களுக்கெல்லாம் நடுவராகச் செல்கிறார்கள். ஆகவே அவர்களுக்குத் தெரியும்தானே பிற இடங்களில் உள்ள நடைமுறை? இங்குமட்டும் ஏன் நம் ஆட்களே விருதை தேர்ந்தெடுக்கவேண்டும்? இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது” என்கிறார்.

சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கோவா திரைப்படவிழாவோ அல்லது கேரள திரைப்பட விழாவோ மிகவும் அபிமான விழாக்களாக உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து பலர் அங்கு செல்கின்றனர். இந்த முறை கேரள விழாவுக்கான அனுமதிச் சீட்டு பெற இணையத்தில் விண்ணப்பிப்பதில் பல கோளாறுகள். அதன் காரணமாக அங்கு செல்லமுடியாத பலரும் சென்னை விழாவை தவறவிடக்கூடாது என்று வந்தனர். ஆனால் அவர்கள் அந்த விழாக்களுக்கும் சென்னை விழாவுக்குமான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகின்றனர். “படம் முடிந்தவுடன் நடக்கும் கலந்துரையாடல் ஒரு விழாவின் முக்கியமான விஷயம். ஆனால் சென்னை விழாவில் அது நடப்பதே இல்லை.” என்கிறார் லஷ்மி சரவணகுமார். 

பிற படவிழாக்களில் ‘பார்வையாளர்கள் விருது’ என பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு படத்துக்கு விருது வழங்கப்படும். அப்படியொரு விருது இங்கு வழங்கப்படுவதில்லை. இது குறித்து கேட்டபோது இந்தியன் சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் தலைவர் தங்கராஜ் “இது நல்ல யோசனைதான். வரும் ஆண்டுகளில் இதை நடைமுறைக்குக் கொண்டு வர முயல்வோம்” என்கிறார். இந்த ஆண்டு ‘அம்மா’ விருது என்கிற பெயரில் இந்த விழாவுக்கு தன்னார்வலர்களாக வந்து பணியாற்றும் சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய படங்களில் இருந்து ஒரு படத்திற்கு விருது அளிக்கின்ற்னர். இந்த ஆண்டு மனோஜ் இவ்விருதைப் பெற்றார். சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களும் இவ்விழாவுக்காக தங்கள் பங்கை உழைப்பாக அளித்துள்ளனர். 

இவ்விழா சினிமா துறையிலிருக்கும் துணை இயக்குநர்களுக்கு முக்கியமானதாகவே இருக்கிறது. நண்பர்களை சந்திக்கும் ஒரு இடமாக, சினிமா குறித்து கலந்துரையாடும் இடமாக இவ்விழா அரங்க வளாகங்களை அவர்கள் மாற்றிக்கொண்டனர். ஒரு வாரம் வேறு எதைப் பற்றியுமே சிந்திக்காமல் சினிமா குறித்து மட்டுமே யோசிப்பதை இவ்விழா உருவாக்கியிருக்கிறது என்கிறார் லஷ்மி சரவணகுமார்.

இந்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்படவிழா 1989-91 வரையிலான திமுக ஆட்சியில் சென்னைக்கு வந்தது. அப்போது 13 ஆண்டுகள் கழித்து சுழற்சியில் சென்னைக்கு வந்தது. இப்போது 24 ஆண்டுகளாக இந்த விழா சென்னையில் நடக்கவே இல்லை. 13 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் தலைவர் கருணாநிதி அந்த விழாவில் கலந்துகொண்டபின் அவருடைய ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அதன்பின் இந்த விழாவை நடத்த ஒருபோதும் கழக அரசுகள் விரும்பவில்லை என்கிற செவிவழி செய்தி ஒன்று உண்டு. இந்நிலையில்தான் திரை ரசிகர்களுக்கு ஒரு விருந்துபோல சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

”எப்போதையும் விட இந்த ஆண்டு சிறப்பாக நடந்தது விழா. ஹலிதா ஷமீமுக்கு இந்த ஆண்டு பூவரசம் பீப்பி படத்துக்கான சிறப்பு விருது கிடைத்தது. அவர் 2ஆவது விழாவிலிருந்தே பத்தாண்டுகளாக கலந்துகொண்டிருக்கிறார். இத்திரைப்பட விழாதான் எனக்கு பட ஆர்வத்தைத் தூண்டியது. அதனால்தான் இந்தத் துறைக்கே வந்தேன் என்று கூறினார். இப்படி ஒரு சிலரையாவது உருவாக்கி இருக்கிறது இந்த விழா என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என்கிறார் தங்கராஜ்.

(நன்றி: இந்தியா டுடே)

No comments:

Post a Comment